மதினாவில் மதானி!

January 24, 2008

டிசம்பர் 14 வெள்ளிக்கிழமை, மதினாவின் மஸ்ஜிதுந்நபவி என்னும் புனிதப் பள்ளியில் தொழுகை முடித்து நானும் எனது நண்பரும் திரும்பிக் கொண்டிருந்தபோது, பள்ளியின் இன்னொரு வாசலிலிருந்து சக்கர நாற்காலியில் அமர்ந்த வண்ணம் அந்த மனிதர் வெளியேறிக் கொண்டிருந்தார். அவருக்கு பின்னே சிவப்பு நிற சீருடையில் இருவர், அவர்களைச் சூழ பத்துப் பன்னிரண்டு பேர். அவரை நான் இதற்கு முன் நேரில் பார்த்ததில்லை; தவிர பத்திரிக்கைகளில் வெளியான அவரது பழைய புகைப்படங்களுக்கும் தற்போதைய தோற்றத்திற்கும் பெருமளவு வித்தியாசம் இருந்தது என்றபோதிலும், அவரை இன்னார் என்று அடையாளப் படுத்த முடிந்தது. அவருக்கு அருகில் நின்ற ஒருவரிடம் அதைக் கேட்டு உறுதிப் படுத்திக் கொண்டோம். அப்துல் நாசர் மதானி தான் அவர்.

அருகில் சென்று சலாம் சொன்னோம். சக்கர நாற்காலியை தள்ளிச் சென்றவர்கள் சற்று நிறுத்தினார்கள். ‘நாங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள், சிங்கையிலிருந்து வருகிறோம்’ என்று அறிமுகப் படுத்திக் கொண்டோம். ‘அப்படியா?’ என்றார். உடல் தளர்ந்திருந்தாலும் முகத்தில் புத்துணர்ச்சி தெரிந்தது. ‘எப்படி இருக்கிறீர்கள்?’ என்றோம். ‘நன்றாக இருக்கிறேன். துஆ செய்யுங்கள்’ என்றார்.

அதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியவில்லை. இருப்பிடத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தவரை அந்த வெயிலில் இன்னும் நிறுத்தி வைத்திருப்பது சரியல்ல என்றும் தோன்றியது. சலாம் சொல்லிவிட்டு விடை பெற்றுக் கொண்டோம்.

மதானி சிறையிலிருந்து வெளியான போது இனி கேரள முஸ்லிம் மக்களின் வாழ்க்கை மேம்பட பாடுபடப் போவதாக ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இறைவன் அவருக்கு நீடித்த ஆயுளைக் கொடுத்து, சமுதாயத்திற்கு பலனளிக்கும் அவரது நோக்கங்கள் நிறைவேற போதிய ஆற்றலையும் வழங்குவானாக என பிரார்த்தித்தோம்.

பின்குறிப்பு: ‘கைதியின் கதை’ என்ற தலைப்பில் அப்துல் நாசர் மதானி பற்றி எடுக்கப்பட்ட ஒரு குறும்படம் இந்தத் தளத்தில் காணக் கிடைக்கிறது.

விமானப் பயணத்தில்…!

January 19, 2007

சிங்கையிலிருந்து சென்னை செல்லும் விமானம் அது. cநடு வரிசையில் ஒரு ஓர இருக்கை என்னுடையது. விமானம் நிரம்பி வழிந்தது. எல்லா பக்கங்களிலும் நம் இந்திய முகங்கள். இப்போதெல்லாம் நிறைய சீன முகங்களும் தென்படுகின்றன. உலக மயமாக்கலின் விளைவு!

எனது பக்கத்து இருக்கையில் இருந்தவர் தமிழர்தான். சந்தேகமேயில்லை. நான் இருக்கையில் அமர்ந்த இரண்டாவது வினாடியில் பேச ஆரம்பித்தவர் வெகு நேரத்திற்கு நிறுத்தவில்லை. இதுபோல இடைவெளி விடாமல் சுவாரஸ்யமும் குன்றாமல் தொடர்ந்து பேசும் கலை சிலருக்கு மட்டுமே வாய்க்கும் போலிருக்கிறது.

அவர் தஞ்சை மாவட்டத்துக்காரராம். 40 வயது வரை விவசாயம் பார்த்துக் கொண்டிருந்தவர் சரியான வருமானம் இல்லாததால் அதன் பிறகு முடிவெடுத்து, பாஸ்போர்ட் எடுத்து, ஏஜண்டை பிடித்து, காசு கொடுத்து, work permit எடுத்து, நல்ல வேளையாக ஏமாறாமல் சிங்கப்பூர் வந்து 10 வருடம் ஆகிவிட்டதாம்.

அவருக்கு அடுத்து இருந்த இரண்டு இருக்கைகளுக்கு இரண்டு இளம் பெண்கள் வந்தார்கள். அவர்கள் தனித்தனியாகத்தான் வந்தார்கள். முதலில் வந்தவர் கொஞ்சம் வெகுளியாகவும் கிராமியக்களையுடனும் இருந்தார். அடுத்து வந்தவர் reserved type போல தெரிந்தார். அதில் முதலாமவர் நம் முன்னாள் விவசாயி அளவிற்கு இல்லாவிட்டாலும் கொஞ்சம் கலகலவென்று பேசக்கூடியவர் போலிருக்கிறது. அவர் கிட்டத்தட்ட தனது வயதையொத்த அந்த reserved type பெண்ணிடம் பேசத்துவங்கி கொஞ்ச நேரத்திலேயே அவர்கள் இருவரும் தோழிகள் போல பேச ஆரம்பித்து விட்டார்கள்.

அதுவரை என்னிடம் கதைத்துக் கொண்டிருந்த முன்னாள் விவசாயி அந்தப் பெண்கள் பக்கம் திரும்பி பேச்சுக் கொடுத்தார். அறிமுகமில்லாத ஆடவரிடம் பேச அவர்கள் தயங்கியது போல தெரிந்தது.

“என்னோட பேசுறதுக்கு ஏன் தயங்குறீங்க? எனக்கு உங்க வயசுல ஒரு பொண்ணு இருக்கு. நான் உங்களுக்கு அப்பா மாதிரி” என்று பாசத்தால் கட்டிப்போட்டார் மு.வி. அதன் பிறகே அவர்கள் அவருடன் சகஜமாக பேச ஆரம்பித்தார்கள்.

அந்தப் பெண்கள் இருவருமே சிங்கையில் இல்லப் பணிப்பெண்களாக வேலை செய்கிறார்களாம்.

சிங்கையில் இல்லப் பணிப்பெண்ணாக வேலை செய்வது அவ்வளவு இலகுவானதல்ல. எஜமானர்கள் நல்ல மனதுடையவர்களாக இருந்தால் சமாளிக்கலாம். அப்படி இல்லாவிட்டால் பணிப்பெண்களுக்கு பெரும்பாலும் நரக வாழ்க்கைதான். ஓய்வில்லாத வேலை, தூங்குவதற்கு போதிய நேரமின்மை, வீட்டு ஆண்களின் பாலியல் தொந்தரவுகள் என பலவகை பிரச்னைகளை அவர்கள் எதிர்நோக்க வேண்டியிருக்கும். ஜன்னலை துடைக்கும்போதோ துணி காயப்போடும்போதோ உயரத்திலிருந்து தவறி விழுந்து பணிப்பெண்கள் உயிரை விட்ட சம்பவங்களும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இது ஒருபுறம் என்றால் எஜமானர்களை வில்லங்கத்தில் மாட்டிவிடும் பணிப்பெண்களும் இருக்கிறார்கள். காதல் விவகாரங்கள், சில்லறைத் திருட்டுகள் மட்டுமல்லாமல் கொலை செய்யக்கூட துணிந்த பணிப்பெண்களைப் பற்றி செய்தித்தாட்களில் படிக்க நேரிடுகிறது.

“_ _ _ _ _ _ _ அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்” என்ற பாடலில் சிச்சுவேஷனுக்கு தகுந்த மாதிரி ‘எஜமானர்’ அல்லது ‘பணிப்பெண்’ என்று பெயரை மாற்றி மாற்றி போட்டு அவரவர்கள் பாடிக் கொள்ள வேண்டியதுதான்.

பெரும்பாலும் பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா பெண்கள் அதிகமாக இந்த வேலையில் இருக்கிறார்கள் என்றாலும் நம்மவர்கள் வீடுகளில் இந்தியப் பெண்களும் இப்பணியில் இருக்கிறார்கள்.

விமானம் சென்னையை நெருங்கிய நேரத்தில் விமானப் பணிப்பெண் அனைவருக்கும் குடிநுழைவு படிவம் (embarkation card) வினியோகித்தார். விவசாயி நண்பர் அவரது படிவத்தையும் பாஸ்போர்ட்டையும் உரிமையுடன் என்னிடம் தந்து ‘இதை எழுதி தாங்க தம்பி’ என்றார். நான் அதை எழுதத் தொடங்கினேன்.

“உன்னோடதையும் குடும்மா. தம்பி எழுதி கொடுப்பாரு”

இன்னொரு பாஸ்போர்ட்டும் படிவமும் என்னிடம் வந்து சேர்ந்தது.

“உன்னோடது?”

“நானே எழுதிக்குவேங்க” என்றார் எந்த reserved type பெண்.

“அப்படியா? நீ படிச்சிருக்கியா?”

“ஆமாங்க. எம்.எஸ்.சி படிச்சிருக்கேங்க” என்று பதில் வந்தது!