அதான் எங்களுக்குத் தெரியுமே!

March 30, 2008

சமீபத்தில் மும்பை சென்று வந்த வெளிநாட்டுக்காரர் ஒருவர் சொன்னார், “மும்பை கட்டிடங்களில் பாதுகாப்பாக லிஃப்டில் பயணிக்க வேண்டுமெனில், ஒவ்வொரு முறையும் 40 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். ஏனெனில், மும்பையில் சராசரியாக 40 நிமிடங்களுக்கு ஒருமுறை மின்தடை ஏற்படுகிறது. நீங்கள் அதிக பட்சமாக 40 நிமிடங்கள் காத்திருந்து மின்தடை ஏற்பட்டு நீங்கியபின் லிஃப்டில் பயணித்தீர்களென்றால் அடுத்த 40 நிமிடங்களுக்கு லிஃப்டில் சிக்கிக் கொள்ளும் அபாயத்திலிருந்து தப்பலாம்”.

இது உண்மை நிலவரத்தை சற்றே மிகைப்படுத்தி வேடிக்கையாகச் சொல்லப் பட்டதுதான் என்றாலும், இதைச் சொன்னவர் டி-ஷர்ட், அரைக்கால் சட்டை, கழுத்தில் கேமரா சகிதம் இந்தியாவுக்கு வந்துச் சென்ற சுற்றுலாப் பயணி என்றால், அவரது நகைச்சுவையைக் கேட்டு நாமும் சிரித்து விட்டு மறந்து விடலாம். ஆனால், இப்படிச் சொன்னவர், பல நாடுகளில் தொழிற்சாலைகள் அமைத்து நடத்தி வரும் பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் தலைவர்; இந்தியாவிலும் ஒரு தொழில் நிறுவனம் தொடங்கும் திட்டத்தை பரிசீலித்துக் கொண்டிருப்பவர் எனும்போது, அவரது நகைச்சுவைக்கு பின்னே மெலிதான ஒரு கவலையும் ஒளிந்து கொண்டிருப்பது தெரிகிறது.

40 நிமிடங்களுக்கு ஒருமுறை மின்தடை ஏற்படுமெனில் ஒரு தொழிற்சாலையை நடத்துவது எப்படி என்ற கவலை ஏற்படுவது நியாயம்தானே? வெளிநாட்டு முதலீடுகளை கவர்ந்திழுக்க விரும்பும் இந்தியா கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் இது போல நிறைய இருக்கின்றன.

‘தி எகனாமிஸ்ட்’ இதழ் (மார்ச் 8-14) ‘இந்தியாவின் வளர்ச்சியை தடுப்பது எது?’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறது.

‘கடந்த 15 ஆண்டுகளாக இந்தியா வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறி வருகிறது. இந்திய நிறுவனங்கள் உலக தரத்திலான நிறுவனங்களுடன் போட்டி போடுகின்றன. மொத்த உலகப் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு கணிசமானது’ எனப் புகழும் அக்கட்டுரை, இந்தியாவின் வளர்ச்சி வேகத்தை தடுக்கும் காரணிகளையும் பட்டியலிடுகிறது.

‘கம்யூனிஸ்ட்களை நம்பி செயல்படும் அரசு, சாதி முறை, மின் தடைகள், கடுமையான தொழிலாளர் நலச் சட்டங்கள் போன்ற பல காரணிகள் இந்தியப் பொருளாதாரத்தை நெருக்கடிக்குள்ளாக்குகின்றன.

இதையெல்லாம் விட பெரிய முட்டுக்கட்டை, ஊழல் மலிந்த அரசு இயந்திரமே! . அரசு அறிவிக்கும் நலத்திட்டங்களின் பலன்கள் மக்களை சென்றடைய விடாமல் தடுக்கும் தடைக்கல்லாய் இருப்பது இதுதான். இந்த பொதுப்பணித்துறையை சீர்திருத்தாமல் நாட்டு நலனுக்காக அரசு எடுக்கும் முயற்சிகள் விழலுக்கு இறைத்த நீராகவே வீணாகிப் போகும்.

பழைய படம் ஒன்றில் நடிகர் தங்கவேலு தன் மனைவிக்கு உப்புமா செய்வது எப்படி என்று விளக்குவார். அவர் சொல்லும் ஒவ்வொன்றிற்கும் அவரது வீட்டுக்காரம்மா, ‘அதான் எனக்கு தெரியுமே!’ என்று வெறுப்பேற்றிக் கொண்டே இருக்கும். ‘அதுக்குப் பிறகு என்ன?’ என்று கேட்டால், ‘அதானே தெரியாது’ என்று சொல்லும்.

அதைப் போல, எகனாமிஸ்ட் சொல்லும் காரணங்களெல்லாம்தான் எங்களுக்குத் தெரியுமே!

அவற்றை நிவர்த்திக்க அரசு என்ன செய்யப் போகிறது?

அதான் எங்களுக்குத் தெரியாது!

‘இண்டியன் பங்க்சுவாலிட்டி’

March 24, 2008

நம்ம ஊரைப் பத்தியோ நாட்டைப் பத்தியோ மத்தவங்க என்ன நினைக்குறாங்கன்னு தெரிஞ்சுக்குறதுல ஒரு சுவாரஸ்யம் இருக்கு. நமக்கே தெரிந்திருக்காத சில விஷயங்களைக் கூட சில சமயங்களில் மத்தவங்க சொல்வாங்க.

அது ஒரு மேலாண்மை பயிற்சி வகுப்பு. வெவ்வேறு நாடுகளிலிருந்து வந்து சுமார் 35 பேர் கலந்து கொண்டிருந்தார்கள். அன்றைய பாடம், இந்தியாவில் தொழில் தொடங்கவிருக்கும் ஒரு வெளிநாட்டு நிறுவனம் இந்தியாவைப் பற்றி என்னென்னவெல்லாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பதைப் பற்றி.

வகுப்பை நடத்திய பேராசிரியர் கேட்டார், “இந்தியாவுடன் வியாபாரத் தொடர்பு அனுபவங்கள் உடைய யாரேனும் இங்கே இருக்கிறீர்களா?”. நான் மவுனமாக இருக்க முடிவு செய்தேன். இத்தாலியப் பெண்மணி ஒருவர் கையை உயர்த்தினார். இந்தியாவுடன் சுமார் 10 ஆண்டுகளாக வியாபாரத் தொடர்பில் இருக்கிறாராம். இந்தியாவின் பல முக்கிய நகரங்களுக்கு சென்றிருக்கிறாராம். சில சமயங்களில் மாதக் கணக்கில் இந்தியாவில் தங்கி சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டிருப்பதாகவும் சொன்னார்.

‘இந்தியர்கள் ரொம்ப நல்லவங்க, வல்லவங்க’ என்று ரொம்ப ‘நல்லத்தனமான’ தகவல்களைச் சொன்னவர், பிறகு ‘மற்ற’ விஷயங்களுக்கு வந்தார்.

“இந்தியாவில் பல வித கலாச்சாரங்களை பின்பற்றும் மக்கள் வசிக்கிறார்கள். ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு பகுதியும் தனித்தன்மை கொண்டது. ஒரு நிறுவனம் இந்தியாவின் எந்தப் பகுதியில் தொழில் தொடங்கப் போகிறதோ அந்தப் பகுதியின் கலாச்சாரத்தினை நன்றாக புரிந்து கொள்வது அவசியம்.

“குறிப்பாக இந்தியாவில் நிலவும் சாதி அமைப்பு… இது மிகவும் சென்சிடிவ் ஆன ஒரு விஷயம். சில சாதிப் பிரிவினர் மற்ற சாதிப் பிரிவினருடன் கலந்து பழக மாட்டார்கள். சில பிரிவினர், வேறு சில பிரிவினரின் கீழ் பணியாற்ற ஒப்ப மாட்டார்கள். வேலைக்குப் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியது இது!”

சாதி அமைப்பு நாமெல்லாம் அறிந்ததுதான்! ஆனால் அதுவே வெளிநாட்டினரின் கண்ணோட்டத்தில் HR பாலிசியை தீர்மானிக்கும் ஒரு காரணியாக இருக்கும் என்பது எனக்கு புதிய விஷயம்.

பயிற்சி நடத்துனர் அவர் பங்கிற்கு சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். “இந்தியர்கள் எதையுமே மிக நிதானமாக செய்து பழக்கப் பட்டவர்கள். அதாவது, எதையும் குறித்த நேரத்தில் அவர்கள் துவங்குவது அரிது. (நம்ம ‘இண்டியன் பங்க்சுவாலிட்டி’யைத்தான் அப்படி சொல்றார்!). இந்த மனப்போக்கிற்கு என்ன காரணம் என்று, இதற்கு முந்திய பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட இந்தியர் ஒருவரைக் கேட்டேன். அவர் சொன்னார், ‘காலத்தைப் பற்றி நாங்கள் ஏன் கவலைப் பட வேண்டும்? எங்கள் கலாச்சாரத்தில் காலம் என்பது முடிவற்றது. ஒருவரின் இந்த வாழ்வு முடிந்து போனால், அவர் இன்னொரு பிறவியாக இன்னொரு வாழ்வைத் துவங்கப் போகிறார் என்று அர்த்தம். அவர் இந்தப் பிறவியில் செய்யாமல் விட்டதை அடுத்தப் பிறவியில் செய்யலாமே?”

அப்படியும் இருக்குமோ?