மதினாவில் மதானி!
January 24, 2008டிசம்பர் 14 வெள்ளிக்கிழமை, மதினாவின் மஸ்ஜிதுந்நபவி என்னும் புனிதப் பள்ளியில் தொழுகை முடித்து நானும் எனது நண்பரும் திரும்பிக் கொண்டிருந்தபோது, பள்ளியின் இன்னொரு வாசலிலிருந்து சக்கர நாற்காலியில் அமர்ந்த வண்ணம் அந்த மனிதர் வெளியேறிக் கொண்டிருந்தார். அவருக்கு பின்னே சிவப்பு நிற சீருடையில் இருவர், அவர்களைச் சூழ பத்துப் பன்னிரண்டு பேர். அவரை நான் இதற்கு முன் நேரில் பார்த்ததில்லை; தவிர பத்திரிக்கைகளில் வெளியான அவரது பழைய புகைப்படங்களுக்கும் தற்போதைய தோற்றத்திற்கும் பெருமளவு வித்தியாசம் இருந்தது என்றபோதிலும், அவரை இன்னார் என்று அடையாளப் படுத்த முடிந்தது. அவருக்கு அருகில் நின்ற ஒருவரிடம் அதைக் கேட்டு உறுதிப் படுத்திக் கொண்டோம். அப்துல் நாசர் மதானி தான் அவர்.
அருகில் சென்று சலாம் சொன்னோம். சக்கர நாற்காலியை தள்ளிச் சென்றவர்கள் சற்று நிறுத்தினார்கள். ‘நாங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள், சிங்கையிலிருந்து வருகிறோம்’ என்று அறிமுகப் படுத்திக் கொண்டோம். ‘அப்படியா?’ என்றார். உடல் தளர்ந்திருந்தாலும் முகத்தில் புத்துணர்ச்சி தெரிந்தது. ‘எப்படி இருக்கிறீர்கள்?’ என்றோம். ‘நன்றாக இருக்கிறேன். துஆ செய்யுங்கள்’ என்றார்.
அதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியவில்லை. இருப்பிடத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தவரை அந்த வெயிலில் இன்னும் நிறுத்தி வைத்திருப்பது சரியல்ல என்றும் தோன்றியது. சலாம் சொல்லிவிட்டு விடை பெற்றுக் கொண்டோம்.
மதானி சிறையிலிருந்து வெளியான போது இனி கேரள முஸ்லிம் மக்களின் வாழ்க்கை மேம்பட பாடுபடப் போவதாக ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இறைவன் அவருக்கு நீடித்த ஆயுளைக் கொடுத்து, சமுதாயத்திற்கு பலனளிக்கும் அவரது நோக்கங்கள் நிறைவேற போதிய ஆற்றலையும் வழங்குவானாக என பிரார்த்தித்தோம்.
பின்குறிப்பு: ‘கைதியின் கதை’ என்ற தலைப்பில் அப்துல் நாசர் மதானி பற்றி எடுக்கப்பட்ட ஒரு குறும்படம் இந்தத் தளத்தில் காணக் கிடைக்கிறது.

