கை கோர்க்கும் சீனாவும் இந்தியாவும்!
January 12, 2006PetroKazakhstan என்னும் எண்ணை நிறுவனத்தை வாங்க இருபெரும் ஆசிய சக்திகளான சீனாவும் இந்தியாவும் போட்டியிட்டன. இந்த போட்டி பற்றி எனது முந்திய பதிவில் எழுதியிருக்கிறேன். இதில் வெற்றி பெற்றது சீனா.
வெகு வேகமாக வளர்ந்து வரும் இரு ஆசிய அண்டை நாடுகள் சீனாவும் இந்தியாவும். இவ்விரு நாடுகளின் பொருளாதார நடவடிக்கைகள் வேகம் எடுக்கும் அளவிற்கு இந்நாடுகளில் எண்ணைக்கான தேவையும் அதிகரித்துக் கொண்டே போகிறது.
2004-ல் இந்தியா ஒரு நாளைக்கு 2 மில்லியன் பீப்பாய்க்கு மேல் எண்ணை உபயோகித்திருக்கிறது. இவற்றில் 70 சதவிகிதத்திற்கு அதிகமானவை இறக்குமதி செய்யப்பட்ட எண்ணைதான். 2025-ல் இந்தியாவிற்கு ஒருநாளைக்கு 7.4 மில்லியன் பீப்பாய்க்கு மேல் எண்ணை தேவைப்படும் என ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
சீனா 2003-லேயே ஒரு நாளைக்கு 5.46 மில்லியன் பீப்பாய் எண்ணை உபயோகித்திருக்கிறது. இன்றைய நிலையில் இது இரு மடங்காக உயர்ந்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. சீனாவில் உபயோகிக்கப்படும் எண்ணையின் அளவு மொத்த உலக உபயோகத்தில் 7% ஆக இருக்கிறது. சீனா தனக்கு தேவையான எண்ணணயில் மூன்றில் ஒரு பங்கை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது.
இந்த சூழ்நிலையில் வெளிநாட்டு எண்ணை நிறுவனங்களை வாங்குவதில் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் போட்டி நிலவுவது தவிர்க்க இயலாதது. இவ்விரு நாடுகளும் அமெரிக்கா போன்ற வல்லரசுகளுடனும் போட்டியிட வேண்டும். இவ்விரு நாடுகளின் பொருளாதார நடவடிக்கைகளையும் இவற்றிற்கிடையே நிலவும் போட்டியையும் மொத்த உலகமும் உற்று கவனித்து வருகிறது.
இந்த நூற்றாண்டின் மகத்தான பொருளாதார சக்திகளாக வளரக்கூடிய சாத்தியக்கூறு இந்த இரு நாடுகளுக்குமே இருப்பதாக பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இவ்விருவரும் தங்களுக்கிடையே போட்டியிட்டுக்கொண்டிருந்தால் இவர்களின் வளர்ச்சி என்னாவது? இந்த சூழலில்தான் இந்த இரு நாடுகளும் இணைந்து புத்திசாலித்தனமான சில நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்கள். அதாவது, இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான போட்டியை ஆரோக்கியமானதாக வைத்துக் கொள்ளும் அதே வேளையில், தேவை ஏற்படும்போது இருவரும் இணைந்து செயலாற்றுவது என்பதுதான் அந்த முடிவு.
கடந்த ஆகஸ்டில் PetroKazakhstan கைநழுவி போன உடனேயே, இனி வரும் சந்தர்ப்பங்களில் சீனாவுடன் இணைந்து செயலாற்றுவதற்கான விருப்பத்தை இந்தியா அறிவித்தது. சீனாவும் இந்த ஏற்பாட்டிற்கு ஆர்வம் தெரிவித்தது.
முதன் முறையாக சென்ற டிசம்பரில் இருநாட்டு எண்ணை நிறுவனங்களாகிய ONGC-யும் CNPC (China National Petroleum Corp)-யும் இணைந்து சிரியாவின் Al-Furat எண்ணை வயல்களை வாங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறார்கள்.
இவ்வாறு இந்த இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது ஒரு சிறந்த முன்னேற்பாடாகவே தோன்றுகிறது. Win Win Situation என்பது போல இந்த ஏற்பாட்டில் இரு நாடுகளுக்குமே அனுகூலங்கள் அதிகம். இருவரின் வாங்கும் சக்தியும் ஒருங்கிணையும்போது பேரம் பேசுவதற்கான பலம் அதிகரிக்கிறது. Economy of Scale -ஐக் கொண்டு செலவுகளையும் ஓரளவுக்கு கட்டுப்படுத்தலாம். அமெரிக்கா போன்ற பெரும் போட்டியாளர்களையும் ஓரளவுக்கு சமாளிக்கலாம்.
எதிலும் சந்தேகம் கொள்ளும் சிலர் (sceptics) ‘இதெல்லாம் சரி வருமா?’ என கேள்வி எழுப்புகிறார்கள். 1962-ல் ஒரு எல்லைத்தகராறை காரணமாக கொண்டு போரிட்ட இரு நாடுகளும் இப்போது நட்புறவு கொள்வது நடக்குமா? அப்படியே நடந்தாலும் இந்த உறவு எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும்? என்கிறார்கள் இவர்கள்.
இரு நாடுகளுக்கும் இடையில் போர் நடந்தது உண்மைதான் என்ற போதிலும், தற்போதைய சூழ்நிலையில் இருவரின் கவனமும் தத்தம் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் இருக்கும்வரை, சிறு சிறு அரசியல் மனஸ்தாபங்கள் பெரிய அளவில் வெடிக்க வாய்ப்பில்லை. பொருளாதார உறவுகள் மேலும் வலுப்பெற்றால், அது அத்தகைய அரசியல் மனஸ்தாபங்களை அமுங்கிப்போகவும் செய்யலாம்.
பொறுத்திருந்து பார்ப்போம்.!

